திருமண விவகாரத்தில் நடிகை வனிதாவைக் கஸ்தூரி விமர்சனம் செய்தார். முன்னதாக லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவை விமர்சித்தார். அவர்கள் இருவர் மீதும் வனிதா போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் சூர்யா தேவி என்பவர் மீது வனிதா புகார் அளித்திருந்தார். அவரை போலீஸார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விட்டனர்.இந்நிலையில் கஸ்தூரியையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இது குறித்து வனிதாவிடம் கேட்டபோது கஸ்தூரிக்கும் எனக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னிடம் மொக்கை வாங்கிச் சென்றார். அந்த பகையை மனதில் வைத்து என்னை இப்போது விமர்சிக்கிறார். அவர் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறேன். போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் ஆனால் வரவில்லை. காரணம் கேட்டதற்கு கொரோனாவால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது போலீஸார் தெரிவித்த தகவல்.
லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் வன்முறை தூண்டுவது போல் டிவிட்டரில் மெசேஜ் போடுகிறார். ஒருசிலர் அவர் வயதானவர் அவர் மீது எதற்குப் புகார் கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் பேசினார்கள். வயதானவர் என்றால் சட்டத்தை மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?அப்படியென்றால் வயதானவர்கள் எல்லோருமே குற்றம் செய்யத் தொடங்கி விடுவார்கள். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சட்டப்படி அவர்கள் மீதெல்லாம் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
என்னைப்பற்றி நிறைய யூடியூப் சேனலில் விமர்சனங்கள் வருகின்றன. அதெல்லாம் துக்கடா யூடியூப்கள். அவர்களைப் பற்றிப் பேசி அவர்களைப் பெரிய ஆட்கள் ஆக்க விரும்பவில்லை.
அதிகாரப்பூர்வ பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. அவர்கள் ஏனோ தானோ என்று எதையாவது போடுவதில்லை தவறு என்று சொன்னால் அதற்கு மறுப்பும் போடுவார்கள். அப்படித் தான் நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். என்னை நம்பி நிறைய யூடியூப் சேனல்கள் வந்திருக்கின்றன. எல்லா சேனலிலும் என்னுடைய தம்நைல் படங்கள் தான் இருக்கின்றன. அதிகாரப்பூர்வமற்ற யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்று நான் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு நடிகை வனிதா கூறினார்.