ஊரடங்கில் பலருக்கு வேலை போனதுடன் இருந்த கொஞ்சப் பணத்தையும் மின் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது நீருக்குள் அழுத மீனின் கண்ணீர்போல் வெளியில் தெரியவில்லை. ஆனால் பிரபல நடிகைகள் டாப்ஸி, ஹுமா குரோஷி, நடிகர் பிரசன்னா வரை அதை இணைய தளங்களில் பதிவிட்டு அதிகப்படியான மின் கட்டணத்தைக் கண்டித்து கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இது மின் கட்டணமா? மின் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் ஊழலா என்று கேட்டிருந்தனர். எதற்கும் இதுவரை முறையான பதில் இல்லை.
பழம்பெரும் இந்தி படப் பாடகி ஆஷா போஸ்லே பங்களா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் லோனேவாலாவில் உள்ளது. இந்த வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் வந்திருக்கிறது. இதனை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது. மின்கட்டணத்தைப் பார்த்து மயங்கி விழாத குறையாக அதிர்ச்சி அடைந்தார் ஆஷா போஸ்லே.இது குறித்து அவர் கூறும்போது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கு முறையே ரூ.8,996.98 மற்றும் ரூ.8,855.44 கட்டணம் வந்தது. ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எப்படி ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆஷாவின் புகாரை மறுத்துள்ளது மின்சார துறை. ஆஷா வீட்டு மின்மீட்டரை சோதித்தபோது அது சரியான அளவிற்கான மின் கணக்கைக் கொண்டு தான் அதன்படி பில் போடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.ஆஷா போஸ்லே கடந்த 2016 ம் ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது இதே போல் புகார் தெரிவித்திருந்தார். அப்போதைய மாநில அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே புகார் குறித்து ஆராயப்படும் என உறுதி கொடுத்திருந்தார்.