பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.முன்னதாக மருத்துவமனையில் அவர் கடந்த 5ம்தேதி சேர சென்றபோது தனக்கு உடல்நிலை சீராக இருப்பதாகவும் லேசான காய்ச்சல், இருமல் இருப்பதாகவும் கொரோனா தொற்று அறிகுறியிருப்பதாகவும் வீடியோவில் தெரிவித்தார். ஒரு சில நாளில் அவர் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென கடந்த 12ம் தேதி கவலைக்கிடமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எஸ்பிபி உடல் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகினர் ரசிகர்கள் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். இதில் பாரதிராஜா முதல் அனைத்து இயக்குனர்கள் நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், தொழிலாளர்கள் நேற்று பங்கேற்றனர். ஆனாலும் எஸ்பி பி உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இன்று அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானதாகத் தெரிகிறது. நுரையீரலில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் இதயத் துடிப்பும் குறைந்து வருவதாகத் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.