ஒருவழியாகப் பெரிய ஹீரோக்களுக்கு ஒடிடி தளங்கள் விரித்த வலை ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. கொரோனா லாக்டவுடன் பெரும்பாலானவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் திரைப்படங்களை வெளியிடும் ஒடிடி தளங்கள் நன்றாகக் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றன. முதலில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு நடித்த படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. அடுத்து பெரிய ஹீரோக்கள் படங் களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதில் தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஒடிடி தளத்துக்குக் கைமாறி இருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இது பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கும் நிலையில் இப்போதைக்கு தியேட்டர் திறப்பு இல்லை, செப்டம்பர் மாதம் தியேட்டர் திறப்பு பற்றி ஆலோசிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் அவ்வப்போது தியேட்டர் திறப்பு இப்போதைக்கு இல்லை என்பதை உறுதி செய்வதுபோல் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மற்ற பெரிய படங்களும் ரிலீஸ் பற்றித் தடுமாறி வருகின்றன. மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று ஒன்றுக்குப் பலமுறை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனாலும் ஒடிடியில் படத்தை வெளியிடப் பேச்சு நடப்பதாகச் செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கிறது. 80 கோடி, 100 கோடிக்கு சில ஒடிடி தளங்கள் மாஸ்டர் படத்துக்கு தர தயார் என பேரம் நடக்கிறதாம். இதில் எந்த முடிவும் விஜய்யின் முடிவை பொருத்தே மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பு தரப்பும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பும் சொல்கிறது.
விஜய் தனது படத்தை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் தியேட்டரில் பார்த்துத்தான் மகிழ்ச்சி அடைவார் அதனால் அவர் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருப்பார் என்று ரசிகர்கள் தரப்பில் பேசப்படுகிறது. சூரரைப்போற்று படத்துக்கு 40 கோடி விலை போயிருப்பதாக உறுதிசெய்யாத தகவல் தெரிவிக்கின்றன.