கொரோனா காலத்தில் மாணவர்கள், விவசாயி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவி கிடைக்கிறது என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் நடிகர் சோனு சூட்தான். கொரானா தளர்வு அறிவித்தாலும் பள்ளிகள் திறப்பு இல்லை என்று அரசு அறிவித்திருப்பதுடன் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனருக்கு ஆன்லைன் வகுப்பு என்பது புதிய விஷயம். பல மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், லேப்டாப் இருக்காது. அதற்கு 10 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்தளவுக்குச் செலவு செய்யும் தகுதி இருந்ததால் அவர்கள் தனியார்ப் பள்ளியிலே சேர்ந்திருப்பார்கள். பல அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த வசதி கிடையாது.
ஹரியானா மாநிலத்தில் மோர்னி என்ற கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட் போன் கிடையாது. பல கிலோமீட்டர் தூரம் சென்று ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்களிடம் இவர்கள படிக்கிறார்கள். இந்த அவலம் பற்றி பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதுபற்றி அறிந்த நடிகர் சோனு சூட், 'இனி அந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி இருக்காது. அவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிடும்' என்று தெரிவித்தார்.
மறுநாள் அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நண்பர் மூலமாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அனுப்பி வைத்தார். இதுபற்றி மகிழ்ச்சி தெரிவித்த சோனு சூட் ஹரியான பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதைப் பார்க்கும் அற்புத நாள் தொடங்கியது எனத் தெரிவித்திருக்கிறார்.