கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஏராளமானவர்கள். காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட ரேஷன் கடை கியூவில் நிற்க வேண்டியதாயிற்று சினிமா துறை பிரபலங்கள், இன்னும் பல்வேறு தொண்டு அமைப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சங்கங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் உதவி வருகின்றனர். இன்னும் இதுபோன்ற உதவிகள் மக்களின் நிலைமை சீரடையும் வரை தொடர்ந்தாக வேண்டும் என்ற நிலைமை உள்ளது.
சூர்யா, சோனுசூட், பிரகாஷ்ராஜ், சூரி. விஷால் எனப் பல திரையுலக பிரபலங்கள் உதவிகள் செய்து வருகின்றனர். வளர்ந்து வரும் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவிகளை தாங்கள் வசிக்கும் பகுதியில் செய்கின்றனர். கதம் கதம் மாயை உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருப்பவர் சனம் ஷெட்டி. இவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சாமானிய மக்களுக்கு உதவினார். தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்டக் குழு ஒன்றைத் தொடங்கியுள்ளார். "நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேஷன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.