தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் கன்னடம். இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சியான் விக்ரம் தனது துருவ் விக்ரமை தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார். அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். வர்மா என்ற பெயரில் இப்படத்தை இயக்குனர் பாலா முற்றிலுமாக இயக்கி முடித்தார். ரிலீசுக்கு தயார் ஆன நிலையில் அப்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், பாலா இயக்கிய வர்மா திருப்திகரமாக இல்லை எனப் படம் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தினார்.
இதையடுத்து தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆனாலும் வர்மா படத்தை அப்படியே ஓரம் கட்டி வைத்துவிட்டு அர்ஜூன் ரெட்டி படத்தை மீண்டும் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் படமாக்கினார்கள். கிரைசியா இயக்கினார். இப்படம் பின்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டே பாலா இயக்கத்தில் உருவான வர்மா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் அதே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலையும் தயாரிப்பு தரப்பு மறுத்திருக்கிறது.
பாலாவின் வர்மா தற்போது ஒடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்தாலும் எதிர் காலத்தில் வெளியாகாது என்று தயாரிப்பு தரப்பு உறுதி செய்யவில்லை. ஒருவேளை அப்படம் வெளியானால் தற்போதுள்ள சர்ச்சைக்காகவே அப்படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.