திரை அரங்கு திறப்பு கலந்தாலோசனை கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? இயக்குனர் டி ராஜேந்தர் கடும் கண்டனம்..

Director T.Rajendar condemns Central Disaster organization

by Chandru, Sep 5, 2020, 14:29 PM IST

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் கடந்த 5 மாதமாக மூடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தும் திரை அரங்குகள் திறக்க அனுமதி தரவில்லை. திரை அரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை பதில் எதுவும் வரவில்லை. இந்நிலையில் வரும் 8ம் தேதி திரை அரங்குகளைத் திறப்பது குறித்து மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பு வரும் 8ம் தேதி கலந்தாலோசனை கூட்டத்துக்கு திரை அரங்கு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அதில் ஒட்டு மொத்தமாகத் தென்னிந்திய மாநில அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவரும் திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பு சார்பாக மீண்டும் திரை அரங்குகளை திறப்பது குறித்து ஒரு கலந்தாலோசனை கூட்டத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடத்த இருக்கிறார்கள். அதற்காகத் திரைப்பட உரிமையாளர்கள், திரைப்பட அதிபர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். வட இந்தியாவிலே இருக்கிற அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா. எங்கள் தென்னகத்திலே ஆண்டுக்கு 800 படங்களுக்கு மேற்பட்ட படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அழைப்பு இல்லை. குறிப்பாகக் குறைவான படங்களை வெளியிடக்கூடிய குஜராத்திலே அந்த மாநிலத்தில் இரண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள். இதைப்பற்றி தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. 800ம் படங்கள் வெளியிடும் எங்கள் தென்னகத்தைப் புறக்கணிப்பது என்பது கண்டனத்துக்குரியது, வருத்தத்துக்குரியது. எங்களுடைய ஆதங்கத்தைத் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.

You'r reading திரை அரங்கு திறப்பு கலந்தாலோசனை கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? இயக்குனர் டி ராஜேந்தர் கடும் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை