இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷாந்த் தற்கொலைக்கு மன உளைச்சல் காரணம் என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டப்பட்டார் அதற்கு சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவொரு புறம் இருக்கப் பாலிவுட் வாரிசு நடிகர்கள் சுஷாந்த்தை அவமானப்படுத்தியதால் அதில் ஏற்பட்ட மன உளைச்சலில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி அளித்தார்.
மேலும், மகாராஷ்டிர முக்கிய அரசியல் பிரமுகர்களும் மும்பை போலீஸாசாரும் இந்த விவகாரத்தில் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக மும்பை ஆளும் கட்சி சிவசேனா மீது கங்கனா குற்றம் சாட்டியிருந்தார். இது அக்கட்சியினரைக் கோபம் அடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மகாராஷ்டிராவையும் , மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். அவர் மும்பை வரும்போது பெண்கள் கன்னத்தில் அறைவார்கள். பயம் இருந்தால் மும்பைக்குத் திரும்ப வரவேண்டாம் எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதில் அளித்த கங்கனா, என்னை மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் பயமுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன் முடிந்தால் என்னைத் தடுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்தார். கங்கனா ரனாவத் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரியானா உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். முன்னதாக கங்கனாவும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது பாலிவுட்டில் உள்ள போதை பயன்பாடு பற்றி பகிரங்கமாகத் தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பிரிவு (Y +) பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இமாச்சல பிரதேசம் மனாலியில் தங்கியுள்ள கங்கனா வீட்டுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.