Friday, Jun 25, 2021

நீட் தேர்வில் மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி.. சூர்யாவை அடுத்து பிரபல இயக்குனர் தாக்கு..

Director Thagarbhachan Support To Suriya

by Chandru Sep 15, 2020, 18:22 PM IST

நீட் தேர்வுக்குப் பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.. மகாபாரத காலத்துத் துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாகக் கேட்டார்கள். நவீனக்கால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என காட்டமாகக் கூறி இருந்தார்.

சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்துக்கு இயக்குனர் பாரதிராஜா, சீனு ராமசாமி போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இன்று இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் என கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களுக்கான தகுதித் தேர்வை யார் நடத்துவது? கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் தான் முதல் தலைமுறையாகக் கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும்! ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்.

எதிர்வரும் தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளைத் தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளைத் தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியிலிருந்து காப்பாற்ற முடியாது.ஏழைப் பிள்ளைகள் 12 பேர்களை இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது! உள்ளக்குமுறலில்,வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழக மக்களின் மனங்களுக்குத் திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது. தமிழகத்தின் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள். இக்கருத்து சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை! இந்நேரத்தில் நம் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.அனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இதில் உடனடியாக வெற்றி காண வேண்டும்.

இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்திருக்கிறார்.

You'r reading நீட் தேர்வில் மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி.. சூர்யாவை அடுத்து பிரபல இயக்குனர் தாக்கு.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை