சினிமா தியேட்டர் பக்கம் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து 5 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர் ரிலீஸுக்காக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் காத்திருக்கின்றனர்.
அக்டோபர் மாதம் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அநேகமாக அது ஒர்க் அவுட் ஆகும் சூழல் உள்ளது. அக்டோபர் 2வது வாரத்தில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என அடிக்கடி வதந்திகள் வந்துப்போய்க் கொண்டிருக்கிறது. அப்படித் திறக்கப்பட்டால் மாஸ்டர், ஜெகமே தந்திரம் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீபாவளி போட்டிக்கு இளம் நடிகர் படமும் மோத உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா துறையில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார், கடைசியாக வெளியான அவரது, ஹீரோ படம் கைவிட்டாலும் அதற்கு முன் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர்கள் நெல்சன் திலிப்குமார் மற்றும் ரவிக்குமார் ஆகியோருடன் 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், இந்த ஆண்டு 'தீபாவளி' சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் வெளியாகும் என்பது தான்.
கோவாவில் படமாக்கப்பட்டு வந்த 'டாக்டர்' ஊரடங்கால் திடீரென நிறுத்தப்பட்டது. ஆனாலும் ஊரடங்கு நாட்களில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இதுவரை படமான பகுதிகளை சீராக எடிட்ச் செய்து வைத்துவிட்டாராம். ஏற்கனவே படத்தில் இடம் பெறும் 'செல்லம்மா' மற்றும் 'நெஞ்சம்' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு 'டாக்டர்' படப்பிடிப்பை முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே தேவை. ஆகவே, அக்டோபரில் தீபாவளிக்கு முன் பட பணிகளை முடித்தால் தீபாவளியில் 'டாக்டர்' வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே இத்தனை நாள் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாகத் தீபாவளி நாளில் மாஸ்டர், ஜெகமே தந்திரம், டாக்டர் என 3 படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. இந்த படங்கள் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுத்து வரும் என்று தியேட்டர் அதிபர்களும் நம்பிக்கையாக உள்ளனர்.