கொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..

by Chandru, Sep 21, 2020, 17:12 PM IST

தமிழில் வெளியான 'அங்காடித் தெரு' படத்தில் நடித்திருப்பவர் சிந்து. வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ், பிளாக் பாண்டி உள்படப் பலர் நடித்திருந்தனர். நடிகை சிந்து வேறு பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது பலருக்கு உதவிகள் செய்து வந்தார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காகச் சிகிச்சை பெற்று வரும் அவர், மருத்துவச் சிகிச்சைக்குப் பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில் அவரை நேரில் பார்க்கச் சென்ற நடிகர் பிளாக் பாண்டி சிந்துவின் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அதில் நடிகை சிந்து கூறியிருப்பதாவது:
நான் நன்றாகத்தான் இருந்தேன். கொரோனா காலத்தில் நிறையப் பேருக்கு உதவி செய்தேன்.சினிமா ஃபீல்ட்ல இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே உதவி செய்திருக்கிறேன். கொரோனா பிரச்சனைக்கு முன்பே எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. மருத்துவமனை போனபோது கொரோனா நேரத்துல ஆபரேஷன் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அதை அப்படியே விட்டதால இப்போது அதிகமாகி விட்டது. எனக்கு மார்பக புற்றுநோய். பிறகு கடன் வாங்கி ஆபரேஷன் செய்து அதை நீக்கிவிட்டேன்.

கீமோ சிகிச்சை ஆபரேஷனுக்கு பிறகுதான் கொடுமையாக இருக்கு. ஒவ்வொரு இன்ஜெக்ஷனும் 9,500 ரூபாய், 5, 500 ரூபாய்னு இருக்கு.. ஏகப்பட்ட செலவு. இன்னும் கீமோ சிகிச்சை போகும்னு டாக்டர்கள் சொல்றாங்க. இப்ப மார்புல மட்டும் 5 சதவீதம் இருக்கு. அதுக்குப் பிறகு பைனல் கார்ட்ல வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நான் நிறையப் பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். என்னைச் சுத்தி ஒரு கும்பலே இருந்தது. எனக்கு கஷ்டம்னு ஆஸ்பிடல்ல படுத்ததும் எல்லாருமே காணாம போயிட்டாங்க. மனரீதியாகவும் பணரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறேன். மருத்துவச் செலவுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். எனக்காக உதவி பண்ணுங்க.

மருந்து மாத்திரைகளுக்கு நான் இதிலிருந்து மீண்டு வந்தால், நிறையப் பேருக்கு உதவி பண்ணுவேன். என் கூட பழகினவர்களுக்கு என்னைப் பத்தி தெரியும். எனக்கு நடிகர் கார்த்தி, சாய் தினா, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல், தீபா, சவுந்தர். இவங்கலெல்லாம் உதவி பண்ணியிருக்காங்க.இவ்வாறு சிந்து கூறி உள்ளார். நடிகர் பிளாக் பாண்டியும் சிந்துவின் மருத்துவச் செலவுக்கு உதவ வேண்டும் என்று அதே வீடியோவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை