பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் பண்ணை வீட்டில் இன்று அடக்கம் .. 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை..

SPB Body Burying in Thamaraipakkam farmHouse with Government honour

by Chandru, Sep 26, 2020, 10:23 AM IST

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி சாதனை படைத்தவர் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. உடனே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்குச் சென்றார் எஸ்பிபி.

எஸ்பிபி குணம் அடைய திரையுலகினர் ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். மருத்துவமனை டாக்டர்கள் சர்வதேச டாக்டர்களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். படிப்படியாக எஸ்பிபி உடல்நிலை குணம் அடைந்தது. மயக்கநிலைக்குச் சென்றுவிட்ட எஸ்பிபி பிறகு அதிலிருந்தும் மீண்டார். ஐபேட்டில் கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ரசித்துப் பார்த்து வந்தார். சைகை மூலம் பேசினார். பிஸியோதெரபி சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு தந்தார். அவராகவே சாப்பிடவும் தொடங்கினார். தனது தந்தைக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் ஆனாலும் சுவாசம் சீராகவில்லை நுரையீரல் சீராவதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தரப்படுகிறது என்று எஸ்பி பி மகன் சரண் தெரிவித்தார்.

விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவரது உடல் நிலை கவலைக்கிடமானது வென்ட்டிலேட்டர் சிகிச்சைக்கு நுரையீரல் ஒத்துழைக்கவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உயிரைக் காக்க விடிய, விடிய டாக்டர்கள் போராடினார். விவரம் அறிந்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை பற்றி விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது. எஸ்பிபி உடல்நிலை நல்ல நிலைமையில் இல்லை என்று நம்பிக்கை இழந்த நிலையில் கூறினார்.

டாக்டர்கள் எஸ்பிபியை காப்பாற்றத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று (25 செப்டம்பர் ) மதியம் 1.04 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு 74 வயது ஆகிறது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோபிந்த். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ் ,விஷால், விவேக் ராஜ்கிரண் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் மருத்துவமனையிலிருந்து எஸ்பிபி உடல் கண்ணாடி பேழையில் வைத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ரசிகர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கொரோனா தொற்று காலத்தில் இப்படி கூட்டம் சேர்வது கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் எனவே எஸ்பிபி உடலை செங்குன்றம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி குடும்பத்தினரிடம் போலீஸார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணி அளவில் எஸ்பி பி உடல் தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று காலை 10 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்குத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் எஸ்பிபி உடலுக்கு மரியாதை செலுத்தினார். எஸ்பிபிக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடத்த வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று முதல்வர் பழனிசாமி எஸ்பிபி உடலுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை