விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ண காந்த். இவர் லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.கிருஷ்ணகாந்துக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணம் அடைந்தார்.
மறைந்த கிருஷ்ண காந்த்தின் வயது 52. மனைவியின் பெயர் லட்சுமி. ஆசிரியராக பணிபுரிகிறார். சந்திரகாந்த, உதயகாந்த் என இரு மகன்கள் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஏவி எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது
கடந்த மாதம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பார்ட்னர்களில் ஒருவராக இருந்த தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் சுவாமிநாதன் மரணம் அடைந்தார்.
திரையுலகில் சமீப காலமாகச் சோகமான மரண சம்பவங்கள் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. சில தினக்களுக்கு முன்புதான் பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74 வயதில் மரணம் அடைந்தார். இவர் கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் சேர்ந்தார். திடீரென்று உடல்நிலை கவலைக்கிடமானது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வந்தார். கொரோனா தொற்றிலிருந்தும் மீண்டார். ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் சென்றது இதையடுத்து இறந்தார்.சென்ற மாதம் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜிக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இறந்தார். கோலிவுட்டில் அடிக்கடி நிகழும் மரண சம்பவங்கள் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.