ஓடிடி-யில் படம் ரிலீஸாவது முழுமையான ஆசீர்வாதம்.. பிரபல நடிகர் வித்தியாசமான புது சிந்தனை..

by Chandru, Oct 1, 2020, 16:02 PM IST

ஒடிடி தளங்களில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகவிருக்கும் நிலையில் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் வெளியாகிறது.த்ரில்லர் திரைப்படமான சைலண்ட் (தமிழ்) நிசப்தம் (தெலுங்கு) ஓடிடியில் வெளிகவிருக்கும் முதல் மும்மொழி திரைப்படம் என்பதால் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாதவன் மற்றும் இயக்குநர் ஹேமந்த் மதுகர் இருவரும் தங்கள் படம் ஓடிடி-யில் வெளியாவதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாதவன் கூறும்போது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என்றே நினைத்திருந்தேன். திரையரங்குகள் வேறு வகையான வசீகரத்தைக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால் இது போன்ற தருணங்களில் ஓடிடி-யில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பது ஒரு முழுமையான ஆசீர்வாதம். குறிப்பாக தற்போதைய சூழலில், ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு மிகவும் எளிமையானதும், வசதியானதுமாகும். அவற்றுக்கு புவியியல் அல்லது உடல் ரீதியான எல்லைகள் எதுவும் கிடையாது. மக்கள் எந்த படத் தையும் தங்கள் வீட்டிலிருந்து தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் பார்க்க முடியும். பல கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் பார்வையாளர்களை மகிழ்விக்கவும் ஓடிடி மூலம் வாய்ப்பு கிடைக்கிறது, இதன் காரணமாக உள்ளடக்கங்களும் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றன என்றார்.

உலகம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளதால், ஓடிடியில் வெளியாகும் மிகப்பெரிய படங்களில் நிசப்தமும் ஒன்று என இயக்குநர் ஹேமந்த மதுகர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறும்போது இப்படம் முழுக்க முழுக்க சியாட்டில் நகரில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் படத்தில் உண்மையான போலீஸார் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படத்தின் ஒரு காட்சி சியாட்டில் நகரில் ஸ்பேஸ் நீடில் அருகில் உள்ள டுவல் என்னும் பகுதியில் உள்ள ஒரு உண்மையான காவல் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் உள்ள அனைத்து லொகேஷன்களும் உண்மையானவை. இதில் எந்த செட்களும் போடவில்லை. என்றார்.
சைலண்ட் அல்லது நிசப்தம் ஒரு சைக்காலஜி த்ரில்லர் திரைப்படம். இதில் ஒரு சிக்கலான கொலையைக் கண்டுபிடிக்கும் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத சாக்சி என்னும் பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். ட்விஸ்ட் மற்றும் திரில்லிங் காட்சிகள், தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு, கனமான கதை போன்றவை நிச்சயமாகப் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.

டிஜி விஷ்வா பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன், அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மைக்கேல் மேட்சனில் முதல் இந்தியத் திரைப்படமாகும். ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 2 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகத் தயாராகியுள்ளது. நிசப்தம் தெலுங்கு த்ரில்லர் படம் தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்களுக்காக சைலன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News