மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. மிமிக்ரி கலைஞரான இவர், முதலில் மலையாளப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் வில்லன், நாயகன் உள்படக் குணச்சித்திர வேடங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உட்பட மொழிகளிலும் ஏராளமான படங்களில் இவர் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த போது உடலில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கூறினர். இதுவரை கலாபவன் மணியின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவரது தம்பி ராமகிருஷ்ணன். இவர் சிறந்த நடனக் கலைஞர் ஆவார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் ஆன்லைன் மூலம் மோகினியாட்ட நடன நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு நடன நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்துக் கண்டித்து அவர் சங்கீத நாடக அகாடமி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்.தான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால் தான் சங்கீத நாடக அகாடமி நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்தது என்று ராமகிருஷ்ணன் புகார் கூறினார். இந்நிலையில் இன்று இரவு இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சங்கீத நாடக அகாடமியில் நடன நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் ஏற்பட்ட வேதனையில் தான் இவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.