கிரிக்கெட் வீரராக மாறிய ஹீரோ..

Muthiaya Muralitharan Bio pic

by Chandru, Oct 14, 2020, 10:05 AM IST

ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது. உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லப்பட்டு அங்குத் தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாகக் கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார்.

அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும் போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை எனச் சிக்குகிறார். அந்த தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். எந்தவொரு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய நம்பிக்கை அளிக்கக் கூடிய கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி. 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இந்த முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்குக் கூட '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையை கேட்டுவிட்டு தமிழகத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது. உலகளவில் கவனம் ஈர்த்து வரும் ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது படக்குழு. '800' படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்தாலே கதைக்களம் என்ன என்பதை அனைவராலும் யூகித்துவிட முடியும்.'800' படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது.

இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த இருக்கிறோம். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜ சேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட் டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன் கூறியது: திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்து வீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்.

முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி கூறியது:அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்குச் சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது.கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய ஆளுமையாக உள்ள முத்தையா முரளிதரன் சந்தித்த இன்னல்களை எப்படியெல்லாம் தாண்டி வெற்றியைத் தொட்டார் என்ற கதை, கண்டிப்பாகப் பார்வையாளர்களை உத்வேகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

You'r reading கிரிக்கெட் வீரராக மாறிய ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை