அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒப்பந்தம் ஆனது எப்படி?

by Chandru, Oct 14, 2020, 13:48 PM IST

அனுஷ்கா, மாதவன் நடித்த படம் சைலன்ஸ் என்று தமிழிலும் நிசப்தம் என தெலுங்கிலும் உருவானது. அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்). அற்புதமான கதையுடன், மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்ஸன் எப்படி இந்தப் படத்தில் நடிக்க வந்தார் என்பது குறித்து இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் கூறுகிறார்.

முதலில் எப்படி ஒரு ஹாலிவுட் நடிகருக்கான தேடல் இருந்தது என்பது பற்றியும், பொதுவாக ஏன் ஹாலிவுட் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்பது பற்றியும் ஹேமந்த் பகிர்கிறார். "ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்திலிருந்தே ஒரு ஹாலிவுட் நடிகரை நாங்கள் தேடி வந்தோம். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸில் நான் தங்கியிருந்த போது, ஹாலிவுட் நடிகர்கள் ஒரு அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனவே அதன்படி அவர்கள் ஹாலிவுட்டை தாண்டி மற்ற படங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் அதற்காக பெரிய வழிமுறை ஒன்று உள்ளது. அதனால் தான் பல ஹாலிவுட் நடிகர்கள், கவுரவத் தோற்றம் போல வந்து செல்வதைத் தாண்டி இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றுவதில்லை.

நான் பல நடிகர்கள் பற்றி யோசித்தேன். ஆனால் அவர்களை நடிக்க வைப்பது என்பது மிகக் கடினம். கடைசியாக அமெரிக்காவில் இருக்கும் ஒரு காஸ்டிங் டைரக்டர் (நடிகர்கள் தேர்வு இயக்குநர்) ஒருவரை வேலைக்கு அமர்த்தினேன். அவர் மூலமாக நடிகர்கள் தேர்வு நடத்திப் பல அமெரிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு ஒரு நட்சத்திரம் தேவை என்று அவரிடம் சொன்னேன். தனக்கு மைக் கேலைத் தெரியும் என்றும், அவரிடம் பேச முடியும் என்றும் சொன்னார். பிறகு நான் என் திரைக்கதையை அனுப்பினேன். தொலைப்பேசியில் அவரிடம் பேசினேன். பிறகு அவரை சந்தித்தேன். அவருக்குக் கதையும், அவரது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. அவர் அனுபவம் பெற, இந்திய அமெரிக்க தயாரிப்பைப் போல இருக்கும் ஒரு இந்தியப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார். நாங்கள் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. அங்கு இருந்தால் நடிகர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்பதால். இந்திய நடிகர்கள் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தைப் போலத்தான் படப்பிடிப்பு நடந்தது" என்கிறார் ஹேமந்த்.

சுவாரசியமான கதைக் கருவுக்காகக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் நிசப்தம், அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்க முடியும். இந்தப் படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். டிஜி விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார். அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஷாலினி பாண்டே, சுப்ப ராஜு, ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமெரிக்க நடிகர் மைக்கேல் மேட்ஸனின் முதல் இந்தியத் திரைப்படம் இது.

Get your business listed on our directory >>More Cinema News