கடந்த 2006 ஆம் ஆண்டில் புரஜெக்ட் ரன்னிங் திரைப்பட உதவியாளர் மிரியம் மிமி ஹேலி மற்றும் 2013 ஆம் ஆண்டில் சிகையலங்கார நிபுணர் ஜெசிகாமான் ஆகியோரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றம் சாட்டி பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து ஹார்வி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, வெய்ன்ஸ்டீனின் உடல்நிலை மோசமாக உள்ளது. நலிவுற்றிருக்கும் அவரை விடுதலை செய்யாவிட்டால் சிறையிலேயே இறந்துவிடுவார் என்று ஹார்வி வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஹார்வி வெய்ன்ஸ்டீன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது ஹார்வி வழக்கறிஞர் மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்றம் அவரது மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் ஹார்வியின் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பார்வையை இழந்து விட்டார். சுமார் 20 வகையான மருந்துகளைப் தினமும் சாப்பிடுகிறார். முறையான மருத்துவ வசதி வழங்கா விட்டால் தயாரிப்பாளர் ஹார்வி சிறையிலேயே இறந்துவிடுவார் என்று அவர் வாதிட்டார்.
மேலும் வழக்கறிஞர் குறிப்பிடும்போது, வெய்ன்ஸ்டீன் தனது வாழ்க்கையில் சமூக சேவை செய்துள்ளார். பலருக்கும் நிதி மற்றும் பிற வழிகளில் உதவியுள்ளார். எனவே, அவர் செய்த சமூக சேவையின் அடிப்படையில் அவரது தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஹார்வி வழக்கறிஞர் வாதாடினார். தயாரிப்பாளர் ஹார்வி செய்த சமூக மற்றும் தன்னார்வ சேவை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.