இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை 800 என்ற பெயரில் உருவாக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்ப் பற்றாளர்கள் முதல் இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்தவர் முரளிதரன் அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்குக் கோரிக்கை விடப்பட்டது. நாளுக்குநாள் இந்த கோரிக்கை வலுத்தது. எதிர்ப்பை கண்டு தயக்கம் அடைந்த முரளிதரன் பின்னர் விஜய் சேதுபதியை தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று விஜய் சேதுபதி விலகினார்.
முன்னதாக முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க நடிகர் தனுஷிடம் படத் தரப்பு பேசியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதேபோல் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ் முரளிதரன் இளைய பருவ கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டபோது அவரும் நடிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் படம் இப்போதைக்கு நின்றாலும் இதை உருவாக்கும் முயற்சி தொடரும் பொருத்தமான நடிகர் கிடைக்கும்போது பட மீண்டும் தொடங்கும் என முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.