பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணை 6ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகையை உயிரோடு கொளுத்துவேன் என்று முக்கிய குற்றவாளி ஒருவர் கூறியது தொடர்பாக எந்த நடவடிக்கையும் விசாரணை நீதிமன்றம் மேற்கொள்ளவில்லை என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன் மலையாள முன்னணி நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக இருந்த சுனில்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து திலீப்பும் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முதலில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையை பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நீதிபதி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதால் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் இதே கோரிக்கையுடன் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். இது தொடர்பாக கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மூடப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடைபெறும் போது மிக குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருக்கின்றனர்.
அவர்கள் பாதிக்கப்பட்ட நடிகையை அச்சுறுத்தும் வகையிலும், மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் கேள்விகளைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். இதை விசாரணை நீதிபதி கண்டுகொள்வதில்லை. நீதிபதி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அரசு தரப்பின் சார்பிலும் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டன. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் தன்னுடைய தன்னுடைய மகள் மூலம் முன்னாள் மனைவியான மஞ்சுவாரியரின் வாக்குமூலத்தை மாற்ற முயற்சித்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தும் அதை நீதிபதி பதிவு செய்யவில்லை.
இதுதவிர இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட நடிகையை உயிருடன் கொளுத்துவேன் என்று ஒரு நடிகரிடம் கூறினார். அந்த விவரம் நீதிமன்றத்த்தில் தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிபதி பதிவு செய்யவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தை முறையாக நீதிமன்றம் பதிவு செய்யவில்லை. எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்காது என்று அவர் கூறினார். இதை இன்று பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம், வரும் 6ம் தேதி வரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.