தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தேர்தல் தலைமை அலுவலகத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்தார். இது பரபரப்பானது. இதையறிந்த விஜய் அதற்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தார்.என் தந்தை கட்சி ஒன்றைப் பதிவு செய்ததாக அறிகிறேன் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு எனது அனுமதியோ அல்லது என்னுடைய ஈடுபாடோ கிடையாது. எனது ரசிகர்கள் என் தந்தையின் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதோ அல்லது கட்சிக்காக பணியாற்றுவதோ கூடாது என்றார்.
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவியும் விஜய் தாயாருமான ஷோபா சந்திரசேகர் கூறும்போது, எஸ்.ஏ.சி ஒரு சங்கத்தை அமைப்பதற்காக சில ஆவணத்தில் கையெழுத்து கேட்டார். அதில் கையெழுத்திட்டேன். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்துக்காக என்னை எஸ் ஏ சி என்னை அணுகினார். ஒரு சங்கத்தை அவர் கடமைப்பட்டதாகவும் கூறினார். எஸ்.ஏ.சி அதை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் திட்டமிட்டிருந்தார். அதில் என்னை பொருளாளாராக நியமித்திருப்பதாக கூறினார்.
விஜய்க்குத் தெரியாமல் அதில் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பவில்லை. பிறகு எஸ்.ஏ.சி கட்சிக்காக விண்ணப்பித்துள்ளார் என்பதை அறிந்த பிறகு, கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், பொருளாளர் பதவியை வகிப்பதற்கும் விருப்பமில்லை என்று நான் கூறிவிட்டேன் . தனது அரசியல் நுழைவு தொடர்பான கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மவுனம் காக்குமாறு ஏற்கனவே தனது தந்தையிடம் விஜய் கூறியிருக்கிறார். விஜய் தனது அப்பாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, விஜய் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறினார்.
இதற்கிடையில், இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும் போது,விஜய்யின் அரசியல் கட்சி அல்ல, இதற்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. விஜய்யும் நானும் எதிரிகள் அல்ல, விஜய் எனது மகன், விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் நான். ரசிகர் மன்றத்தைத் தொடங்க விஜய்யின் அனுமதியை நான் கேட்கவில்லை, அதேபோல் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்ய விஜய்யின் அனுமதியைக் கேட்கவில்லை என்றார் எஸ்.ஏ.சி. விஜய்க்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் விஜய் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விஜய் தந்தை கட்சி பணியாற்ற மன்றத்தினரை அழைக்கும் போது அவர்களால் அதை மறுக்க முடியுமா என்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2021ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் எஸ்.ஏ.சந்திர சேகர் தொடங்கி உள்ள போட்டியிட்டால் அதில் வேட்பாளர்களாக நிற்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தந்தைக்காக விஜய் பிரசாரம் செய்ய வருவாரா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.
ஏற்கனவே உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் விஜய் மன்றத்தினர் போட்டியிட்டுப் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த ஆர்வத்தில் சட்டமன்ற தேர்தலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.