7 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.. ரெஸ்பான்ஸ் எப்படி?

by Chandru, Nov 10, 2020, 14:57 PM IST

உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு அனுமதி அளித்தும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

தியேட்டர் அதிபர்கள் மத்திய மாநில அரசுக்கு தியேட்டர் திறக்க அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழ்நாடு திரை அரங்கு மல்டி பிளக்ஸ் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை நேரில் சந்தித்து தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அவர் அதை ஏற்று நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்தார். இதையடுத்து கடந்த சில நாட்களாகவே மூடிக்கிடந்த தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் பணிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்தன. தமிழகத்தில் மொத்தம் 1140 தியேட்டர்கள் உள்ளன பல தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் செவ்வாய்க் கிழமை சென்டிமென்ட்டால் சில தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. நேற்று முதல் சில திரை அரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் நடந்து வந்தது.

அரசு அனுமதிப்படி இன்று சென்னையில் சத்யம் தியேட்டர்கள் உள்ளிட்ட பல சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தான் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். இன்று செவ்வாய்கிழமை என்பதால் புதுபட ரிலீஸ் எதுவும் இல்லை. மேலும் புதிய படங்கள் வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில தியேட்டர்கள் திறக்க நல்ல நாள் பார்த்து காத்திருக்கிறார்கள்.கொரோனா தடைக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் அந்தந்த தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தன.

மல்டி பிளக்ஸ் தவிர்த்து தனி தியேட்டர்களில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, கமல்ஹாசன் நடித்த பாப நாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விஸ்வாசம், தனுஷ் நடித்த அசுரன், ஹரிஸ் கல்யாண் நடித்த தாராள பிரபு மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள், ஓ மை கடவுளே, திரெளபதி போன்ற படங்களைத் திரையிட்டு உள்ளனர். தியேட்டரில் சமூக இடை வெளி கடைபிடிக்கும் வகையில் ஒரு சீட் காலியாக விட்டுத்தான் அடுத்த சீட்டில் ரசிகர்கள் அமரவைக்கப்பட்டனர்.தியேட்டர் அதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

விபிஎப் கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் அதைத் திரை அரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லை.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எம்ஜிஆர் மகன், களத்தில் சந்திப்போம், இரண்டாம் குத்து போன்ற படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலைமை போகப்போகச் சீராகும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

You'r reading 7 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.. ரெஸ்பான்ஸ் எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை