பெங்களூருவில் கடந்த 2 மாதத்துக்கு முன் போதைப் பொருள் கடத்தி விற்ற டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி கன்னட திரையுலகில் சில நட்சத்திரங்களுக்குப் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதிகாரிகள் துருவி துருவி விசாரித்ததில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயர் அம்பலமானது. அவர்கள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர், பின்னர் விசாரணைக்கு அழைத்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெங்களூர் அக்ராஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தனித்தனியாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இருவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர் ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. சுமார் 2 மாதமாக இருவரும் சிறையில் இருக்கின்றனர்.
ராகினி, சஞ்சனா ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தனர். அவர்கள் சிறையில் இருப்பதால் படத் தயாரிப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
காந்திகிரி என்ற படத்தில் நடித்து வந்தார் ராகினி. இப்படத்தை ரகு ஹாசன் இயக்குகிறார். பிரேம் ஹீரோவாக நடிக்கிறார். சிறையில் இருக்கும் ராகினி ஜாமீனில் வெளியே வந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் படப் பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. ராகிணி திவேதியின் கால்ஷீட் இன்னும் 12 நாட்கள் தேவைப்படுகிறது. அவர் இல்லாமல் அக்காட்சிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது.
அவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை நடிக்க வைப்பதும் இயலாத காரியம். அப்படிச் செய்தால் அது தயாரிப்பாளருக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர். தர்மசங்கடமான நிலையில் படக் குழுவினர் கையை பிசைந்துக்கொண்டிருகின்றனர். மீண்டும் ஜாமீன் வழக்கு வந்து அதில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே படப் பிடிப்பைத் தொடரும் சூழல் உள்ளது.பிரகாஷ் பெலாவடி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ராகினி ஒப்பந்தமாகி இருந்தார், அதற்கும் இதே நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. நடிகை சஞ்சனா கல்ராணி தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார், அந்த படப்பிடிப்பும் பாதிப்பட்டிருக்கிறது.