ஒன்றரை வருடம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிம்பு சென்ற அக்டோபர் மாதம் முதல் புதிய முடிவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். சிம்புவை ஒப்பந்தம் செய்து படம் முடிப்பது ஒரு வருட காலம் ஆகிவிடும் என்பதையெல்லாம் பழங்கதையாகி விட்டார்.கடந்த அக்டோபரில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடிக்கச் சென்றார். 40வது நாள் படத்தை முடித்து கையில் கொடுத்துவிட்டு மாநாடு படப்பிடிப்புக்குச் சென்று விட்டார்.
இந்த படத்தை முடித்தவுடன் அடுத்த யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்றால் அது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் செய்தியாக அமைந்திருக்கிறது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. நிஜம்தானா என்ற கேள்விக்கெல்லாம் இடமே கிடையாது. உறுதிதான் அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் அடுத்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்களாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் நடிக்கும் படத்தை இயக்க முடிவாகி இருந்தது, அதற்கான ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்தல், சம்பள விஷயம் போன்ற பிரச்சனைகளால் அப்படம் அப்படியே நின்றிருக்கிறது. அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. இதற்கிடையில் தான் சிம்பு படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார். அதற்கான டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது படப் பிடிப்புக்கான நேரம். முழுக்க இரவு படப்பிடிப்பாகவே இது அமைக்கப்பட்டிருக்கிறதாம். டீஸரும் அப்படித்தான் இருந்தது.
லோகேஷுக்கு இரவு படப் பிடிப்பு கைவந்த கலை. மாநகரம், கைதி படங்களையும் ஊரடங்கு நேரத்தில் இயக்கினார். கமலுக்கும் இரவு படப்பிடிப்பு பெரிய விஷயமில்லை. எப்போது கூப்பிட்டாலும் வந்து நடிப்பார். லோகேஷ் கனகராஜ் என்பதால் தாமதத்திற்கெல்லாம் நேரம் கிடையாது. ஒரே மாதத்தில் படத்தை முடித்து கையில் கொடுத்துவிடுவார். ஏனென்றால் நடிப்பது கமல்ஹாசன். ஷூட்டில் அவர் இருந்தால் வேலைக்கு ஓய்வும் இருக்காது. கமல் படத்தை முடித்தவுடன் சிம்பு படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அநேகமாக டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கவும் வாய்ப்புள்ளது. இப்படத்தைக் கமலின் ராஜ் கமல் நிறுவனமே தயாரிக்கிறது.