சீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி..

by Chandru, Nov 25, 2020, 15:14 PM IST

ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதுபற்றி பட இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்துக் கூறியதாவது:சினிமாவில் பலருக்கு முன்னுதாரணமாக, மிகசிறந்த நடிகராகத் திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு.

நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராகத் தன்னை அவர் வடிவமைத்துக் கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும், இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பெரும் பயணம். ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகளைத் தந்து, இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்கிறபோதே இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர் பார்ப்பு மிக்க படமாக மாறி விடுமளவு இந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் அவர். பொது முடக்கக் காலத்திற்கு பிறகு எங்கள் படமான “கிளாப்” படத்தின் படப் பிடிப்பில் அவர் இணைவது பெரும் மகிழ்ச்சி. எப்போதும் முழு ஆர்வத்துடன், படப் பிடிப்பில் உள்ள அனைவரி டமும் எளிமையாகப் பழகி, நேர்மறைத்தன்மையோடு பெரும் உற்சாகத்தை பரப்புகிறார். பொது முடக்கக் காலத்தின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு “கிளாப்” படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டுள்ளது பெரிய சந்தோஷத்தைத் தந்துள்ளது. படத்தை வரும் 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு இயக்குனர் கூறினார்.

பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும் “கிளாப்” படம் பன்மொழி திரைப்படமாகத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க அனுபவ மிக்க நடிகர்களான பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் மைம் கோபி, முனீஷ்காந்த் மற்றும் பல பிரபல முகங்கள் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய அம்சமாக இசைஞானி இளைய ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் (Big Print Pictures) சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, பி. பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளனர்.

You'r reading சீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை