இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் சுஷாந்த்துக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து அதிகளவில் கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ரியா மீது போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவருக்குப் போதை மருந்து விற்பவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். போதை மருந்து பயன்பாடு பாலிவுட்டில் இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும் வாரிசு நடிகர்கள் மீது புகார் கூறியதுடன் பிரபல இந்தி படத் தயாரிப்பாளர்- இயக்குனர் கரண் ஜோஹர் மீதும் சரமாரியாகப் புகார் கூறினார்.
சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. கரண் ஜோஹர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதை மருந்து எடுத்துக் கொள்வது போலவும் அதைக் கரன் ஜோஹர் ஊக்கப்படுத்துவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நடிகர்கள் ரன் வீர் கபூர், தீபிகா படுகோனே. அர்ஜூன் கபூர் ஆகியோர் போதை மருத்து எடுத்துக் கொள்ளும் காட்சிகள் வீடியோவில் இருந்தது. ஆனால் இதுகுறித்து அப்போது பதில் அளித்த கரண் ஜோஹர், நான் போதை மருந்து எடுப்பது கிடையாது மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவது கிடையாது என்றார்.
தற்போது இதுகுறித்து போதை மருந்து தடுப்பு துறை (என் சி பி) தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளது. கரண் ஜோஹரை இன்றைக்கு விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே போதை மருந்து விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.