மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் அவர் அரசியலில் குதித்தார். தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு தீவிர அரசியலிருந்து விலகினார். கடந்த 2 வருடங்களாக மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.கடந்த 2007ம் ஆண்டு ஷங்கர் தாதா ஜந்தாபாத் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
பின்னர் 2017ம் ஆண்டு கைதி நம்பர் 150 படத்தில் நடித்தார். இது தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் ஆக உருவானது. அதன்பிறகு 2019ம் ஆண்டு செரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் படப்பிடிப்புக்காகக் காத்திருந்தார். கொரோனா தளர்வுக்குப் பிறகு ஆச்சார்யா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்ற சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சிரஞ்சீவியும் இதனை தெரிவித்தார்.
ஆனால் அடுத்த 2 நாளில் தனக்கு கொரோனா தொற்று இல்லை ஏற்கனவே எடுத்த பரிசோதனை தவறானது என்றதுடன், தான் வேறு மருத்துவமனையில் எடுத்த 3 பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியானது எனத் தெரிவித்தார். அதன் பிறகு அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இதற்கிடையில் தந்து அண்ணன் நாகபாபு மகள் நிஹாரிகா திருமணம் உதய்பூரில் நடந்ததையடுத்து அங்கு சென்று திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மீண்டும் அவர் ஐதராபாத் வந்து ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவருடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்தார். இந்நிலையில் நடிகை சமந்தா தான் நடத்தும் டாக் ஷோவுக்கு வரவழைத்து சிரஞ்சீவியிடம் சிறப்புப் பேட்டி கண்டார். அப்போது சிரஞ்சீவி தனக்குக் கண்ணீர் துடைக்க நடிகை துப்பட்டா கொடுத்த சம்பவத்தைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:1980களில் சங்கரா பரணம் படம் வெளியானது. அப்படத் தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதில் நடித்திருந்த மஞ்சு பார்கவி எனக்கு தெரிந்தவர் என்பதால் என்னையும் சிறப்புக் காட்சிக்கு அழைத்திருந்தார். நான் சென்றிருந்தேன். படத்தின் கிளைமாக்ஸை கண்டு நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். கண்ணீரை எப்படி துடைப்பது என்று தெரியாமல் விழித்தபோது அங்கிருந்த மஞ்சு பார்கவி தனது துப்பட்டாவை என்னிடம் கொடுத்து கண்ணீரைத் துடைக்கச் சொன்னார். அப்போது திடீரென்று தியேட்டரில் விளக்குகள் போட்டுவிட்டார்கள். நான் மஞ்சு பார்கவியின் துப்பட்டா வில் கண்ணீரைத் துடைப்பதை அங்கிருந்த எனது வருங்கால மனைவி சுரேகா பார்த்து விட்டார். நான் இருந்த நிலையைப் பார்த்து அவர் என்ன சிக்கல் வெளிபடுத்தியிருப்பார் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். அவர் என்னை திருமணம் செய்துக் கொள்ள மாட்டார் என்று நினைத்துவிட்டேன். ஆனால் திருமணம் செய்துக்கொண்டார் என்று கூறியபடி பலமாகச் சிரித்தார் சிரஞ்சீவி.
உடனே சமந்தா, நீங்கள் ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தீர்கள் அல்லவா? அதான் செய்துகொண்டார் என்றார். அதுபற்றி, என் மனைவியிடம் கேட்க வேண்டும் என்று சிரஞ்சீவி பதில் அளித்தார்.