100 சதவீத டிக்கெட் அனுமதி: அரசுக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை.. எல்லா அரங்கிலும் மாஸ்டர் திரையிடுவோம்..

by Chandru, Dec 28, 2020, 18:57 PM IST

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. 8 மாதத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு திரை அரங்கு சங்கம் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல் எடப்படி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கால் தமிழ்நாட்டில் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் குறைந்தபட்சம் மின் கட்டணம் கட்டப்பட்டது. 50 சதவீத பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு சம்பளம் தரப்பட்டிருக்கிறது. இதனால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மொத்தமாக தியேட்டர்காரர்களுக்கு ரூ 2500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர்களால் கொரோனா பரவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விமானங்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கப்படுகிறது. எனவே தியேட்டர்களிலும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்காக ஹீரோ விஜய்க்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் ஈஸ்வரன் படம் வெளியாகிறது. நாயகன் சிம்புவுக்கும் நன்றி. போதுமான வருமானம் இல்லாததால் 400 தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. மாஸ்டர் படம் வரும்போது எல்லா தியேட்டர்களும் திறக்க ஏற்பாடு செய்வோம். ஒடிடி தளங்களால் தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஒடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. அங்குப் படங்களை வெளியிடும் ஒரு குடும்பம் தியேட்டர்களை மூடிக்காட்டுவதாக சவால் விட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா படங்களையும் ஒடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்துக் கொள்ளட்டும் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் அவர்கள் படங்களைத் திரையிட விரும்பவில்லை.

சமீபத்தில் கூட காட்டேரி படத்தைத் தள்ளிவைத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொரோனா 2வது அலை பரவுவதாக வதந்தி பரப்பி ஒரு அறிக்கை வெளியிட்டார். இது தியேட்டருக்கு வரும் ரசிகர்களை பயமுறுத்தும் செயல். ஜெயம் ரவியும் தனது படத்தை ஒடிடியில் வெளியிட்டிருக்கிறார். அவர் எங்களிடம் வரும்போது நாங்கள் பார்த்துக்கொள்வோம். மாஸ்டர் படத்துக்கு ரிசர்வேஷன் தொடங்கிவிட்டதா என்கிறார்கள். இன்னும் பட ரிலீஸ் அறிவிப்பு வரவில்லை வந்த பிறகுதான் ரிசர்வேஷன் தொடங்கும்.இவ்வாறு ஆர்.பன்னீர் செல்வம் கூறினார்.பேட்டியின்போது தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You'r reading 100 சதவீத டிக்கெட் அனுமதி: அரசுக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை.. எல்லா அரங்கிலும் மாஸ்டர் திரையிடுவோம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை