பிரசாந்த்துக்கு வில்லியாகும் பிரபல நடிகை..

by Chandru, Jan 1, 2021, 17:16 PM IST

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் இப்படம் ரீமேக் ஆகிறது என்று அறிவிக்கப்பட்டாலும் டைட்டில் ஜனவரி 1ம் தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு அந்தகன் என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தியாகராஜன் தயாரிக்கிறார். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆயுஷ்மான் குரானா இந்தியில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

பியானோ இசை கலைஞர் வேடம் ஏற்றிருக்கும் பிரசாந்த் கிறிஸ்துமஸ் தினத்தன்று பியானோ இசைத்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். லண்டன் இசைக் கல்லூரியில் பியானோ இசை கிரேட் 4 முடித்தவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதுன் ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தாதுன் படத்தில் இந்தியில் ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு வில்லி தபுவின் கதாபாத்திரமும் முக்கியமானது. இதில் வில்லி வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் தபு. இந்தியில் தபு ஏற்று நடித்த வேடத்தை தமிழில் சிம்ரன் ஏற்று நடிக்கிறார்.

அவரும் வில்லியாக கலக்குவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த சீமை ராசா படத்தில் சிம்ரன் வில்லி வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். முன்னதாக அந்தாதுன் தமிழ் ரீமேக்கை மோகன்ராஜா இயக்குவதாக இருந்தது. அவர் படத்தில் இருந்து விலகவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ப்ரெட்ரிக் அந்தாதுன் ரீமேக்கை இயக்கவிருக்கிறார். அந்தாதுன் படம் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் நிதினும், மலையாளத்தில் ப்ரித்விராஜும் நடிக்கிறார்கள்.

You'r reading பிரசாந்த்துக்கு வில்லியாகும் பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை