நடிகர் விஜய்யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி அவர் ஒரு ஹீரோவாக நிலைக்கும் வரை அவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிறகு விஜய் தனது திறமையால் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஒரு மாதத்துக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்வதாக அறிவித்தார். ஆனால் இதைக்கேட்டு ஷாக் ஆன விஜய் உடனடியாக, தனக்கும் என் தந்தை தொடங்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது ரசிகர்கள் என் தந்தை தொடங்கும் கட்சியில் இணைவதோ கட்சி பணியாற்றுவதோ கூடாது என்று அறிவித்தார்.
இது எஸ்.ஏ.சந்திர சேகருக்கும் விஜய்க்கும் இடையான மோதல் போக்காக கருதப்பட்டது. இந்நிலையில் தான் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சி தனது ஆதரவாளர்களை சந்தித்தார் அவர்கள் விஜய் ரசிகர்களின் அதிருப்தி பிரிவு என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அவர்கள் பொங்கலில் கட்சியைத் தொடங்குவது பற்றி விவாதித்ததாக தெரிகிறது. மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போது, கிறிஸ்மஸ் தினத்தன்று விஜய்யை சந்தித்ததாகவும், தன்னை கட்டிப் பிடித்து விரலில் மோதிரம் போட்டதாகவும் தெரிவித்தார். இருவரும் தங்களின் மனஸ்தாபங்களை மறந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார். இந்த தகவல் வெளிவட்டங்களில் பரவி மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் எஸ்.ஏ.சி. யின் கூற்றுக்களை கடுமையாக மறுத்து வருகின்றனர். "எஸ்.ஏ.சி கூறியது முற்றிலும் தவறானது. கிறிஸ்துமஸ் சமயத்தில் விஜய் சென்னையிலேயே இல்லை. எனவே எஸ்.ஏ.சி அவரை சந்தித்ததாக கூறுவது விந்தையானது. விஜய் நிச்சயமாக எஸ்.ஏ.சி யுடன் இணைந்திருக்கவில்லை. அவர் ஒரு கட்சியைத் தொடங்க முயற்சிப்பது மற்றும் அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்துவது போன்ற தனது தந்தையின் செயல்களால் விஜய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதன் காரணமாகவே அவர் கடந்த ஆறு மாதங்களாக தனது தந்தையுடன் பேசுவது கூட இல்லை. உண்மையில் விஜய் தனது தந்தையின் எண்ணை செல்போனில் பிளாக் செய்து வைத்திருக்கிறார் என்றனர். பொங்கல் நெருக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அரசியல் பரப்பரப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.