மூடநம்பிக்கைகள் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களிலும், நவீன நகரங்களிலும் அவை பரவி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மக்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டும்போது அல்லது ஒரு புதிய கடையைத் திறக்கும்போது, அவர்களில் பெரும்பாலானோர் கண் திருஷ்டி படக் கூடாது என்பதற்காக ஒரு பூசணிக்காயை வைக்கிறார்கள் அல்லது ஒரு திருஷ்டி பொம்மையை கதவின் முன் வைத்திருக்கிறார்கள்.
அதுபோல் விவசாயிகள் மத்தியிலும் இதுபோன்ற நம்பிக்கை உள்ளது. செழிப்பாக வளர்ந்த பயிர்கள் பிறர் கண்பட்டு பூச்சித் தாக்குதல் நடந்து பயிர் அழிந்துவிடக்கூடாது என்று உருவ பொம்மைகளை வைக்கிறார்கள். பல பயிர் வயல்களிலும் இது காணப்படுகிறது. தெலங்கானா மாவட்டம் சித்திப்பேட்டை மாவட்டத்தின் சின்னகோடூர் மண்டலத்தில் உள்ள சந்தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புதுமையான ஒரு விஷயம் செய்தார். அந்த விவசாயி பெயர் சந்திரமவுலி. மற்ற இரண்டு விவசாயிகளைப் போலவே தனது இரண்டு ஏக்கரில் மிளகாய் பயிரிட்டார். துரதிர்ஷ்டவசமாக, இவரது பயிர் கைக்கு வரும் நேரத்தில், பூச்சிகள் அவரது முழு பயிரையும் சேதப்படுத்துகின்றன.
இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்த இழப்பை சந்திரமவுலி சந்தித்து வந்தார். பயிர் செழிப்பாக வளர்ந்த நிலையிலும் இதுபோல் நடப்பதைக் கண்ட சிலர், உன் வயலில் விளையும் பயிர்களைப் பார்ப்பவர்கள் கண் திருஷ்டி வைக்கிறார்கள். அதனால் தான் இப்படி நடக்கிறது. வயல் பயிரில் திருஷ்டி உருவ பொம்மைகளை வைத்தால் இப்படி நடக்காது கண் திருஷ்டி எல்லாம் அந்த பொம்மை மீது போய்விடும் பயிர் பாழாகாது என்று யோசனை கூறினார்கள் அதுவும் சரிதான் என்று கேட்டுக் கொண்ட விவசாயி திருஷ்டி பொம்மையை எல்லோரும் கவனிக்க மாட்டார்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தார். உடனே நகரப்பகுதிக்குச் சென்று தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இரண்டு நடிகைகளின் ஆளுயர கவர்ச்சியான பேனர்களை வாங்கி வந்து அதை வயலின் இருபுறமும் கட்டி விட்டார். அந்த பக்கம் செல்பவர்கள் நடிகைகளின் படம் வயலில் கவர்ச்சியாகத் தொங்கவிடப் பட்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்துச் செல்கிறார்கள்.
மக்களின் கவனம் பயிரின் மீது விழாமல் நடிகைகளின் பேனர் மீது சென்றதால் பயிர்கள் கண்ணுபடாமல் செழிப்பாக இருக்கிறது என்கிறார் அந்த விவசாயி. நடிகைகள் தமன்னா, காஜல் இருவரும் கொரோனா காலத்துக்குப் பிறகு படங்களில் மும்மரமாக நடித்து வருகின்றனர். தமன்னா கொரோனா கால தளர்வில் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று மீண்டார். ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கு தளர்வில் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு மாலத்தீவுக்குத் தேனிலவு சென்று ஒருமாதம் கழித்துத் திரும்பினார். தற்போது காஜலும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.