Saturday, Apr 17, 2021

சிம்புவை புகழ்ந்து தள்ளும் வில்லன் நடிகர்..

by Chandru Jan 11, 2021, 15:38 PM IST

திரையுலகில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் துறை சண்டைக் கலையை செய்யும் துறை. அந்த துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் வேலை செய்திருக்கிறார் ஸ்டன் சிவா . அனைத்து பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். இப்போது நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வருடம் அவரது 4 படங்கள் பொங்கலுக்கு வருகிறது. தெலுங்கில் ரிலீசான கிராக் படத்தில் ரவிதேஜாவுக்கு வில்லனாக நடித்தது. கிராக் தெலுங்கு திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

சிம்பு நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் திருநாளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகக் காத்திருக்கும் “ஈஸ்வரன்” படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகும் “பூமி” படத்தில் ஸ்டணட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். நான்காவதாக, பொங்கலன்று தெலுங்கில் வெளியாகும் அல்லடு அதுர்ஸ் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். ஸ்டன் சிவா.

1989 – லவ் டுடே விஜய் படத்தில் தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமானேன். தொடர்ந்து ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை படங்களில் பணிபுரிந்தேன். விஜய் சார் பரிந்துரையில் தான் காதலுக்கு மரியாதை படம் கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 30 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். காதலுக்கு மரியாதை படத்தில் கிளைமேக்ஸ் நைட் எஃபெக்ட், ரொம்ப ரிஸ்க் ஆன ஸ்டண்ட். காவலன் படத்தில் கோவில் செட் அப்-ல ஒரு ஸ்டண்ட், 60 அடி உயரத்தில் உள்ள மூங்கில் மேல ஏற மாதிரி, காவலன் பைக் சேஸ், அப்புறம் ஒன்ஸ்மோர் படத் தில் ஒரு சண்டை காட்சியில் கண்ணாடி பாட்டில் விஜய் சார் மேல் படும், அந்த ரிஸ்க் ஆன சண்டை , இப்படி நிறைய காட்சிகள் அவர் டூப் போடாமல் பண்ணியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் எப்போது விஜய் ஆர்வமுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். அவர் எப்போதும் எளிமையாக இருப்பார்.

அப்போது போலவே இப்போதும் பழகுவது எனக்குப் பெருமை. எனக்கு பைக் மீது தான் ஆர்வம் அதிகம். பைக் மெக்கானிக் ஆக இருந்தேன். பைக் ஸ்டண்ட் அட்டகாசமாகப் பண்ணுவேன். அதற்கு அப்புறம் காரத்தே போன்ற சண்டைகள் கற்றுக்கொண்டேன். பைக் ஸ்டண்ட் பண்ண சினிமாவில் யூனியனில் என்னைச் சேர்த்தார்கள். அப்புறம் மாஸ்டர் ஆகிவிட்டேன்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்கள் செய்துள்ளேன். இப்பவும் நிறையப் பண்ணிக்கிட்டு இருக்கேன். பிரபாஸ் நடிச்ச தெலுங்கு பில்லா,. பிரபாஸ்க்கு நிறைய படம் பண்ணிருக்கேன். இயக்குநர் முருகதாஸ் மூலம் ஹிந்தி கஜினியில் அமீர்கான் அவர்களுடன் பண்ணினேன்.தொட்டி ஜெயா படத்தில் வந்த ஒரு சண்டைக்காட்சியை முருகதாஸ் சார், அமீர்கான் சாரிடம் காட்டி, அது அமீர்கான் சாருக்கு பிடித்துப் போய் என்னை , கஜினி மூலமாக ஹிந்தியில் அறிமுகப் படுத்தினார்கள். அந்த படத்திற்காக IIFA- விருது வாங்கினேன். வேட்டையாடு விளையாடு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவும் இருந்தேன், அதில் கமல் சாரோட கண்ணு வேணும்னு கேட்கிற சீன்ல நடித்திருப்பேன்.

பிதாமகன் படத்துல தான் நடந்தது. நான் ஸ்டண்ட் மாஸ்டர், விக்ரம் சாரை அடிக்கிற மாதிரி ஒரு காட்சி. அதில் அவருக்கு அடிவிழாம பாதுகாப்பா செய்யனும்னு, நானே நடிச்சேன். பாலா சார் வசனம் கொடுத்தார், அது தான் முதல் முறை ஒரு நடிகரா என்னை அடையாளப் படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் நடித்தேன் இப்போது ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளேன்.சுசீந்திரன் தான் என்னை முழுமையான நடிகராக மாற்றினார். சாம்பியன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஈஸ்வரன் படத்தில் அவர் தான் நடிக்க வைத்தார். வில்லன் வேடம், சிம்புவுக்கு எதிராக நிற்க வேண்டும். பெரிய படம் சிறிது பதற்றம் இருந்தது. ஷீட்டிங்கின் போது எல்லாம் மறந்து விட்டது.

சிம்பு ஒரு அற்புதமான நடிகர். தொட்டி ஜெயா படத்தில் அவருடன் வேலை செய்திருக்கிறேன்.ஈஸ்வரன் படத்தில் சிம்பு புது அவதாரம் எடுத்திருக்கிறார். தொட்டி ஜெயா எடுக்கும் காலத்திலேயே மிக அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். இப்போதும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். கடும் உழைப்பைத் தந்திருக்கிறார். இப்படம் அவரது ரசிகர்களுக்கு அட்டகாச பொங்கலாக இருக்கும். நடிப்பு , ஸ்டண்ட் என இரண்டிலும் நான் தொடர்வேன்.இவ்வாறு ஸ்டன் சிவா கூறினார்.

You'r reading சிம்புவை புகழ்ந்து தள்ளும் வில்லன் நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை