Friday, May 14, 2021

விஜய் சேதுபதி-பார்த்திபன் நடிப்புக்கு எதிர்ப்பு.. சீமான் கட்சியினர் திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு..

by Chandru Jan 12, 2021, 16:19 PM IST

'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் விஜய் சேதுபதி. பார்த்திபன் இணைந்து நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பார்த்திபன் நடிக்கும் கதாபாத்திரம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலவே சித்தரிக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படத்தின் டீஸரில் அதுபோல் தெரிகிறதாம். விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தில் பார்த்திபன் பெயர் சீமான் என்பதற்கு பதிலாக ராசிமான் என்றும், அவரது கட்சி மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் என்று இருக்கிறது. புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.

ராசிமான் போஸ்டர்களை கிழித்து எறிவது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது, சீமான் போஸ்டர்களை கிழித்து எறிவதாக நினைத்து, நாம் தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள். மேலும், ராசிமானை (பார்த்திபன்) பார்த்து, ''எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போற தில்ல.. அதனால நானும் உங்கள சும்மா விடறாத இல்ல.. வாங்களேன்.. நேரடியாவே மோதிப் பார்ப்போம்..''என்று சவால் விடுகிறார் விஜய்சேதுபதி.இதனால் சீமானுக்கு விஜய் சேதுபதி சவால் விடுவதாகவே நினைத்துக்கொண்டு, துக்ளக் தர்பாரை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் துக்ளக் தர்பார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: துக்ளக் தர்பார் திரைப்படக் குழுவினருக்கு வணக்கம்.

நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கனக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சி. நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம்தமிழர் கட்சிக்கும் எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானது போல கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவது போல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் த லலித்குமாரிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்துவிட்டது அந்தமாதிரி காட்சிகளை சி ஜி (கிராபிக்ஸ்) பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கிடையில் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் குரலுக்கு எதிர்குரல் கொடுக்த் தொடங்கி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading விஜய் சேதுபதி-பார்த்திபன் நடிப்புக்கு எதிர்ப்பு.. சீமான் கட்சியினர் திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை