பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர் சோனு சூட். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் வில்லன் வேடம் ஏற்று நடித்து வந்த சோனு கொரோனா கால கட்டத்தில் நிஜ ஹீரோவானார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது தொழில் நிமித்தம் காரணமாக வெளி ஊர்களிலிருந்து வந்து வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு அவரவர்களின் சொந்த ஊருக்கு பஸ், ரயிலில் அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை இதுபோல் மீட்டார். வெளிநாடுகளில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்ப முடியாமலிருந்த மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார். மாடுகள் இல்லாததால் மகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கித் தந்தார்.
வெகுதூரம் என்பதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்த வட நாட்டு கிராமம் ஒன்றை சேர்ந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள் வாங்கி தந்தார். இப்படி அவரது உதவி எண்ணில் அடங்காமல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தனது சொத்துக்களை ரூ 10 கோடிக்கு அடமானம் வைத்து உதவிகளை தொடர்ந்தார். சோனு சூட்டின் நற்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஆந்திராவை சேர்ந்த ஒரு கிராம மக்கள் ஒன்று கூடி அவருக்கு கோயில் கட்டினார்கள். சோனு சூட் கடந்த மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அப்போது இரவில் அவர் சாலையில் நடந்து சென்றபோது சாலையோரத்தில் அவரது பெயரில் ஒரு ஃபாஸ்ட் புட் கடை இருந்ததை கண்டு எதிர்பாராதவிதமாக அந்த ஓட்டலுக்கு சென்றார். அவரைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த ஓட்டல்காரர் வரவேற்றார்.
கையேந்தி பவனாக இருந்த அந்த ஓட்டலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்று விசாரித்த படி தோசைக் கல்லில் சோனு தோசை சுடத் தொடங்கினார். இந்த படங்கள் நெட்டில் வைரலானது. தற்போது மற்றொரு ஆச்சர்யமான படத்தையே சோனுவே வெளியிட்டிருக்கிறார். டெய்லரிங் மிஷினில் அமர்ந்துக்கொண்டு சோனு சூட் துணி தைப்பதுபோல் இருக்கும் அந்த படமும், வீடியோவும் அமைந்திருக்கிறது. அதற்கு அவர் வெளியிட்ட கேப்ஷனில், சோனு சூட் டெய்லர் ஷாப் என்று தலைப்பிட்டதுடன், இங்கு இலவசமாக துணிகள் தைக்கப்படும். பேண்ட் சில சமயம் நிக்கர் ஆகிவிடும். துணிகளின் தையல்களுக்கு காரண்டி எதுவும் கிடையாது என காமெடியாக குறிப்பிட்டு இருந்தார்.