கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர், நடிகைகள் மனம் ஒருமித்து காதலில் விழுந்து திருமணம் செய்திருக்கின்றனர். இந்தியில் சிறுவயதுமுதல் அதாவது பள்ளி பருவம் முதல் நட்பாக பழகி பிறகு காதல் ஜோடியான நடிகர், பேஷன் டிசைனர் தற்போது திருமணத்துக்குத் தயாராகி உள்ளனர். இந்தியில் ஸ்டுடண்ட் ஆப் த இயர் படம் மூலம் ஹீரோவானவர் வருண் தவான். ஏபிசிடி2, ஸ்ட்ரீட் டான்ஸர், தில்வாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பேஷன் டிசைனர் நடாஷா தலால் என்பரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள் அப்போது முதல் இவர்களது நட்பு தொடர்கிறது.
வருண் தவான் நடாஷா தலால் டேட்டிங் செய்து வந்தனர். காதல் ஜோடிகளாகச் சிறகு விரித்துத் திரிந்த இந்த ஜோடிக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் கொரோனா லாக்டவுன் இவர்களது திருமணத்துக்கு இடையூறாக வந்தது. கொரோனா பரவல் முடிந்த பிறகு திருமணம் செய்யக் காத்திருந்தனர், தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. வரும் 24ம் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளது எனப் பாலிவுட்டில் செய்தி பரவியது. இதனை வருண் தவானின் உறவினர் அனில் தவான் உறுதி செய்திருக்கிறார். தெற்கு மும்பையில் உள்ள அலிபாக் கில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது.
கொரோனா கால திருமணம் என்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் திருமணத்தில் கடைபிடிக்கின்றனர். இதனால் குறைந்த அளவிலான உறவினர்கள். நண்பர்கள் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக வருண் தவான் காதலை ஏற்க மறுத்த நடாஷா பற்றி வருணே ஒரு பேட்டியில் கூறினார். அவர் கூறும்போது, சிறுவயது முதல் நாங்கள் நண்பர்கள். வளர்ந்த பின் என் காதலை அவரிடம் மூன்று, நான்கு முறை சொல்லி இருக்கிறேன் ஆனால் அவர் ஏற்கவில்லை. ஆனால் நானும் நம்பிக்கையை கைவிட வில்லை. நிச்சயம் என் காதலை ஏற்பார் என்று காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் அது பலித்தது. அவர் என் காதலை ஏற்றுக் கொண்டார் என்றார். வருண் தவான் சினிமா பாணியில் நாடஷாவிடம் போராடி காதலில் வென்றிருக்கிறார்.நடாஷா இதுவரை பலருக்கு பேஷன் டிசைனிங் செய்திருக் கிறார். அவரது திருமண உடைகளை டிசைனிங் செய்யப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த பொறுப்பை நடாஷாவே ஏற்றுக்கொண்டிருக்கிறார். வருண் தவான். நடாஷா திருமண விழாவில் ஷாருக்கான், சல்மான் கான். அனில் கபூர் போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.