தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இரண்டு வருடத்துக்கு முன் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரஜினிகாந்த் செய்தார். கட்சித் தலைமை நிர்வாகி முதல் பூத் கமிட்டி உறுப்பினர் வரை நியமித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அரசியலிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பின்னர் அரசியல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து காங்கிரஸ் எம்பி ஆனார். ஒரு கட்டத்தில் அரசியலிருந்து விலகி மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டார்.
சிரஞ்சீவி விலகியதையடுத்து அவரது சகோதரர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தார். முன்னதாக அவர் சினிமாவிலிருந்தி விலகிக் கொள்வதாகவும் முழுநேரம் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். 2019ம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இதில் அவர் அப்செட் ஆனார். நடிப்பிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்ததால் அமைதிக் காத்தார். ஆனால் அவருக்குச் சிரஞ்சீவி ஆறுதல் சொன்னதுடன் மீண்டும் நடிக்க வரும் படியும் தக்க சமயத்தில் உன்னுடைய கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யவதாகவும் உறுதி கொடுத்தார். இந்த தகவலை ஜனசேனா கட்சியின் மூத்த தலைவர் நரேந்திர மனோகர் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் போது,சிரஞ்சீவிதான் பவன் கல்யாணைச் சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க ஊக்கம் தந்தார்.
தேர்தலில் ஜனசேனாவுக்காக பிரசாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.
நரேந்திர மனோகர் வெளியிட்ட தகவலால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனசேனா கட்சிக்காகச் சிரஞ்சீவி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று பரவலாகப் பேசப் படுகிறது. இதனால் ஜனசேனா தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.பவன் கல்யாண் ஏற்கனவே பாஜவுடன் கைகோர்த்திருக்கிறார். சிரஞ்சீவியும் கைகொடுத்தால் அதுபலன் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.