'ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததால் நான் ஏமாற்றத்தில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நேரம் கண்டிப்பாக வரும்' என்று கூறுகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.'சைனா மேன் பவுலர்' என்று அழைக்கப்படுபவர் குல்தீப் யாதவ். 26 வயதான இவரது பந்துவீச்சை எளிதில் கணிக்க முடியாது. பந்து எப்போது, எந்த திசையில், எப்படி திரும்பும் என பேட்ஸ்மேனால் எதிர்பார்க்கவே முடியாது. குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தான் குல்தீப் யாதவின் பந்துவீச்சைக் கண்டு மிரளுவார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது குல்தீப் யாதவும் அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டி உள்பட எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் காயமடைந்து வெளியேறிய போது கடைசி டெஸ்ட் போட்டியிலாவது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கருதினர். ஆனால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தருக்குத் தான் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்த குல்தீப் யாதவ், தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் நான் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறேன்.
ஆனாலும் தற்போதைய சூழ்நிலை எனக்கு சாதகமாக இல்லை. பார்டர்- கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விளையாட வாய்ப்பு கிடைக்காது எனக்கு ஏமாற்றமாக இருக்கின்ற போதிலும், நம்முடைய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் என்னால் நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்னுடைய நேரம் கண்டிப்பாக வரும் என நான் கருதுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக விளையாடி உள்ளேன் என்று கூறினார்.