கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளுடன் வர்த்தக நிறுவனங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடுவீதியில் தவித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகர் சோனு சூட்.
லடசக்கணக்கானவர்களை மீட்டு சிறப்பு பஸ்களிலும் ரயிலும் விமானத்திலும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அவரது சேவை இன்று வரை தொடர்கிறது. கடந்த 2 மாதத்துக்கு முன் தனக்கு சொந்தமான சொத்தை ரூ10 கோடிக்கு அடகு வைத்து கடன் வாங்கி உதவி செய்தார். சோனுவின் இந்த உதவி மனப்பான்மையை மக்கள் புகழ்ந்தனர். ஆந்திரா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு கோயிலும் அவருக்கு கட்டினார்கள். சோனு சூட் தற்போது ஒரு சிக்கலில் சிக்கி இருக்கிறார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்கு சொந்தமான 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இருக்கிறது. அதை அவர் ஓட்டலாக மாற்றினார்.
இது சட்டத்துக்கு புறம்பானது, மாநகராட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்று மாநகராட்சி அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளை இடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த சோனு சூட் விதிமுறை எதுவும் மீறவில்லை என்றார். மேலும் அந்தநோட்டிஸை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட் தள்ளுபடி செய்ததுடன் இதுகுறித்து மாநகராட்சியிடமே முறையிடும்படி கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தற்போது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் சோனு சூட்.