சினிமாவுக்கு உள்ளாட்சி வரியை ரத்து செய்க.. அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை..

by Chandru, Feb 1, 2021, 14:38 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்‌ திரைப்படத்துறை இந்த கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ பல இன்னல்களை சந்தித்து வருகிறது. பலர்‌ வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்‌. தொழில்‌ முற்றிலும்‌ நசுங்கி விட்டது. இத்தகைய சூழலில்‌ தங்களுடைய தலைமையிலான அரசு தமிழ்‌ திரைப்படத்துறைக்கு மறுவாழ்வு அளித்திட கீழ்காணும்‌ கோரிக்கைகளை நிறைவேற்றித்‌ தருமாறு பணிவன்புடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.

* அண்டை மாநிலங்களில்‌ (LBT- Local Body Tax)உள்ளாட்சி வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாங்களும்‌ தங்களது அரசும்‌ நீண்டநாள்‌ கோரிக்கையான இந்த 8% உள்ளாட்சி வரியை முழுவதுமாக ரத்து செய்து, தமிழ்‌ திரைத்துறை மறுவாழ்வு பெற்றிட வழிவகை செய்யுமாறு கோருகிறோம்‌.

* இந்த காலகட்டத்தில்‌ திரையரங்குகள்‌, தயாரிப்பாளர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌ என ஒட்டு மொத்த திரைத்துறை பலதரப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதிலிருந்து எப்படி கரையேறப்‌ போகிறோம்‌ என்ற வழித்தெரியாமல்‌ திண்டாடி கொண்டிருக்கிறோம்‌. இத்தகைய சூழ்நிலையை கருத்தில்‌ கொண்டு உள்ளாட்சி வரியை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் எப்படி ரூ.10 கோடிக்கும்‌ கீழ்‌ தயாரிக்கப்படும்‌ படங்களுக்கு மாநில ஜி.எஸ்‌.டி. (SGST)யை முழுவதுமாக விலக்கி சலுகை அளித்துள்ளார்களோ, அதே போன்று தங்களது அரசும்‌ ரூ.10 கோடிக்கும்‌ கீழ்‌ தயாரிக்கப்படும்‌ படங்களுக்கு மாநில ஜி.எஸ்‌.டி. (SGST) - யை முழுவதுமாக ரத்து செய்து தருமாறு கோருகிறோம்‌.

* திரைத்துறையில்‌ நீண்டநாள்‌ பிரச்சினையான விபிஎஃப் ( Virtual Print Fee) கட்டணத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட டிஜிட்டல்‌ நிறுவனங்களுடன்‌
அரசு பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக விலக்கு பெற்றுத்‌ தருமாறு கேட்டுக் கொள்கிறோம்‌.

தங்களுடைய அரசும்‌ சரி, அம்மாவினுடைய அரசும்‌ சரி பல வகையில்‌ தமிழ்‌ திரைத் துறைக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றன. அதை யாரும்‌ மறுக்க முடியாது. இருப்பினும்‌ தற்போது நடந்து வரும்‌ கொரோனா எனும்‌ இந்த பேரிடர்‌ காலகட்டத்தில்‌ குறிப்பாக எங்களுடைய திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட அனைவருமே முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து மிகவும்‌ சிரமமான காலகட்டத்தை சந்தித்து வருகிறோம்‌. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தங்கள்‌ அரசு நிறை வேற்றும் என்று நம்புகிறோம்‌. எங்களது துயரத்தை, கண்ணீரை துடைத்து எங்களது வாழ்வில்‌ மறுஒளி ஏற்றிட வேண்டி பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.. இவ்வாறு சங்க தலைவர் உஷா ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் கோரி உள்ளனர்.

You'r reading சினிமாவுக்கு உள்ளாட்சி வரியை ரத்து செய்க.. அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை