நடிகை சாய்பல்லவி இழுத்துப் போர்த்திக்கொண்டு அழுமூஞ்சி பாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற பலரின் எண்ணத்தை மாரி 2 படத்தில் துள்ளலான நடிப்பின் மூலம் அதில் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் மூலமும் சிதறடித்தார்.இணையதளத்தில் அப்பாடல் உலக அளவில் சாதனை படைத்தது. அப்போது மகிழ்ச்சி வெளியிட்ட தனுஷ் ,சாய் பல்லவியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று அவரது ரசிகர்கள் விமர்சனங்கள் வெளியிட்டனர். ஆனால் சாய் பல்லவியிடம் இதுபற்றி கேள்வி கேட்டபோது தனுஷ் சிறந்த நடிகர் யூடியூபில் பாடல் சாதனை படைத்தது பற்றி அவரிடம் போனில் அழைத்துப் பேசி மகிழ்ச்சி தெரிவித்தேன் என்றார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே தேர்வு செய்யும் சாய்பல்லவி அதில் தீர்மானமாக இருப்பது இன்று வரை தொடர்கிறது. வெற்றி மாறனின் பாவ கதைகள் வெப் ஆந்தாலஜி படத்தில் தனது திறமையான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தினார் சாய் பல்லவி. தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட பர்வம், ஷியாம் சிங்கா ராய் மற்றும் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் ரவுடி பாடல் ஒரு கலக்குகலக்கியது ஆனால் அதற்கு 5 வருடத்துக்கு முன்பே 2013ம் ஆண்டு டாங்கோ திரைப்பட விழாவில் அவர் ஆடிய சல்சா நடன வீடியோ தற்போது நெட்டில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சக நடனக்கலைஞருடன் அவர் சுழன்றும் தாவியும் அந்தரத்தில் நீந்திய படியும் ஆடும் ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டல் பறக்கிறது. ஒரு நிமிடம் இது சாய்பல்லவி தானா என்ற சந்தேகம் வரும் அளவுக்குக் கவர்ச்சி பற்றி கவலையில்லாமல் நடனத்தில் தூள்கிளப்பி இருக்கிறார். அந்த வீடியோவை சுழல விட்டால் நடனம் முடியும் வரை அதிலிருந்து கண்களை வேறு திசைக்குத் திருப்ப முடியாதளவுக்கு நடன விருந்து கொட்டிக்கிடக்கிறது. நடனம் முடிந்த பின் ரசிகர்களின் ஆரவாரம் தொடர்ந்த வண்ணமிருந்தது.