தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் விஜய் மன்ற பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். விஜய் மன்றத்தில் இருந்தபோது பணியாற்றியது போல் விஷால் மன்றத்தில் செயல்பட்டார். பல்வேறு மன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து விஷாலை அதில் பங்கேற்க வைத்தார்.முன்னதாக ஜெயசீலன் நீக்கப்பட்ட பிறகு விஜய் மன்றத்திற்கு புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்லி ஆனந்த் பொறுப்பேற்றார்.
சமீபத்தில் விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்க்கும் கட்சி ஆரம்பிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விஜய் ரசிகர்கள் இரு அணியாகப் பிரிந்து தந்தை ஆதரவாக ஒரு அணி செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் விஜய் மன்ற தலைவரும், தற்போதைய விஷால் மன்ற தலைவருமான ஜெய சீலன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தாராம்.
மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார், சாதி அடிப்படையில் மன்ற நிர்வாகிகளைத் தேர்வு செய்கிறார் என பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறியதாகத் தெரிகிறது.ஜெயசீலனின் இந்த கருத்து தங்களுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படுத்தி இருப்பதாகவும். எனவே ஜெயசீலன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.காலையில் தான் விஜய் மன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக ஜெயசீலன் தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக விஜய் மன்றத்தினர் தற்போது ஜெய சீலன் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.