ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர் டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் உதிர். விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது என்பதே நல்ல அனுபவம்.
டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல் போய்விட்ட சூழலில், தற்போது திரையரங்குகளுக்கு புதிய சாபக்கேடு வந்திருக்கிறது. கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை தான் கடல் மீன் என்போம், ஏரிகளில் பிடிக்கும் மீன்களை ஏரி மீன் என்போம். அதுபோல், திரையரங்குகளில் வெளியானால் தான் அது திரைப்படம். அப்போது தான் திரைப்படங்களுக்கு மரியாதை. ஆனால், தற்போது செல்போனில் படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. அதனால், திரைப்படங்கள் செல் படங்களாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் இன்றி திரை நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும். எனவே, திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும், அதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக, ஒடிடி-யில் வெளியிடலாம். ஆனால் அதையே தொடரும் சூழலை உருவாக்ககூடாது. எனவே பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
அது தான் திரைப்படங்களுக்கு மரியாதை. உதிர் படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். நான் என் படங்களில் பாடல்கள் எழுத யோசித்தேன். வேறு ஒரு பாடலாசிரியர் மூலம் தான் பாடல் எழுத முயற்சித்தோம். ஆனால், எனக்கு திருப்தியளிக்காததால் ஒரு கட்டத்தில், எனது வரிகளே நன்றாக இருப்பதாக இசையமைப்பாளர் தினா கூறிவிட்டார். அப்படி தான் நான் பாடலா சிரியரானேன். நான் பாடல் எழுத முதல் காரணம், தளபதி விஜய், இரண்டாவது இசையமைப்பாளர் தினா. நான் கூட இயக்கும் பாடல்கள் மட்டும் தான். ஆனால், ஞான ஆரோக்கிய ராஜா, தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதனால், அவரை என்னை விட ஒரு படி தாண்டிவிட்டார். உதிர் படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து வெற்றிகரமான இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்” என்றார். ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “உதிர் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்த போது, இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா படம் மூலம் பல நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறது.
குடி...குடி... என்று பாடல் தொடங்கியதும் நான் சற்று அதிர்ச்சியானேன். ஆனால், அதை படி...படி... என்று அவர் முடித்தது சிறப்பு. மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தான் சமூகம் முன்னேறும், அப்படி ஒரு கருத்தை சொன்ன அந்த பாடலுக்காகவே அவரை பாராட்டலாம். சினிமா நடிகர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மாட்டார்கள், வீடு கொடுக்க மாட்டார்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து சினிமாவுக்கு ஒரு இயக்குநரை கொடுத்திருக்கிறார்கள். குடும்பமே சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த படம் நிச்சயம் மிக நல்ல படமாக தான் இருக்கும். ஞான ஆரோக்கிய ராஜாவின் கனவை நிறைவேற்றிய அவரது குடும்பத்திற்காக உதிர் திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்றார். இசையமைப்பாளர் தினா பேசுகையில், “இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா இந்த படத்திற்காக அவர் அனுபவித்த வலிகள் பற்றி அவரின் குடும்பத்தார் சொல்லிய போது, அவைகள் என் கண் முன் நின்றது.
ஒரு குடும்பமே இந்த படம் உருவாக காரணமாக இருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து இப்படி படம் தயாரிப்பாளர்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து படம் தயாரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள். படத்திற்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம் புகழ் பெற்ற பல ஆன்மீக பாடல்களை கொடுத்திருக்கிறார். அவர் சினிமாவுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவருடைய ஆன்மீக பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலம். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால், இந்த அரங்கில் அவர் உட்கார்ந்திருப்பது போல எனக்கு தெரிகிறது. படத்தின் மற்றொரு இசையமைப்பாலர் ஈஸ்வர் ஆனந்த், அவரும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும். இயக்குநர்கள் பாடல்கள் எழுதும் போது, அந்த பாடல்கள் சிறப்பாக வரும், என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. அதற்கு உதாரணம், பேரரசு சார். அந்த வகையில், இந்த படத்தின் பாடல்களை ஞான ஆரோக்கிய ராஜா சிறப்பாக பாடல்கள் எழுதியிருக்கிறார். படமும் சிறப்பாக வந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் உரையாற்றிய பிறகு இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது.