லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். படத்திற்கு 'மும்பைக்கார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பாலிவுட்டை பொறுத்தவரை, நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலமாக பாலிவுட்டுக்குள் முதன்முறையாக அடியெடுத்து வைக்க உள்ளார் விஜய்சேதுபதி. ஆனால் அவர் எந்த வேடத்தில் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், சில ஊகங்கள் பரவி வருகின்றன. மாநகரம் படத்தில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தை மெருகேற்றி அதில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வரும்.
மாநகரம் படத்தில் முனீஷ்காந்த் நடித்திருக்கும் அந்த குழந்தை கடத்தல் எபிசோட் லோகேஷ் கனகராஜ் முதலில் எழுதிய மாநகரம் ஸ்கிரிப்டில் இல்லை. எழுத்தாளர் சீனிவாஸ் கவிநயம் எழுதிய வேறொரு ஸ்கிரிப்டில் இடம்பெற்றிருந்தது. அதனை மாநகரம் படத்துக்காக அவரது அனுமதியுடன் சேர்த்துக் கொண்டனர் என்பது யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயம்.