மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கர்ணன்”. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கர்ணன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டீசர், என படம் தொடர்பான அனைத்து செய்திகளும் டிரெண்டிங் ஆகின.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அண்மையில் வெளியான “பண்டாரத்தி புராணம்” பாடல் சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றதால், “மஞ்சனத்தி” பாடல் என பெயர் மாற்றம் செய்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
“கர்ணன்” படம் எப்போது வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் இடிபோல் விழுந்தது. இதனால் படம் வெளியாகுமா என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. இதனிடையே “கர்ணன்” படம் திரையரங்கில்தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
அதன்படி சொன்னபடியே படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. “கர்ணன்” படத்தை பார்த்த பெரும்பாலானவர்களின் பதிவுகள் அனைத்துமே பாஸிட்டிவ் விமர்சனங்களாக உள்ளன. இதனால், இந்த படம் தனுஷின் மற்றொரு வெற்றி படமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, படத்தின் வசூல் தொடர்பாக விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 525 திரையரங்குகளில் திரையிடப்பட்ட கர்ணன், முதல் நாள் 11 கோடி ரூபாய்க்கு மேலாகவும், இரண்டாவது நாள் ரூ.8 கோடிக்கு மேலாகவும், மூன்றாவது நாள் 11 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்ததாக திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர். இதில் தயாரிப்பாளருக்கு மட்டும் மூன்றே நாட்களில் 22 கோடி ரூபாய் பங்கு கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.