`உலகத்திலேயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரசார மேடைகளில் எதிர்கட்சிகளை துவம்சம் செய்யும் நடிகை விந்தியாவையும், அவரது பேச்சுகளையும் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1999ம் ஆண்டு வெளியான `சங்கமம் படத்தின் மூலம் அறிமுகமான விந்தியா கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். சங்கமம் படம் பட்டித்தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு விந்தியா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார். பின்னர் வட்டப்பாறை உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களி நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
2011-ம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் விந்தியாவுக்கு திமுகவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விந்தியா, திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
``உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா” என்று பதிவிட்டுள்ளார்.