சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என ரஜினி புகழ்ந்து தள்ளினார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வர தயாராகி இருக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சர்கார் இசை வெளியீட்டு விழா நடந்த அதே சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.
அனிருத் இசையில் அட்டகாசமாக உருவாகியுள்ள அனைத்து பாடல்களையும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தி படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.
மரண மாஸ் பாடலை இறுதியாக அனிருத் மேடையேறி பாடி நிகழ்ச்சியை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போல திருவிழா களமாக மாற்றினார்.
நிகழ்ச்சியில், பேசிய பாலிவுட் நடிகர் நவசுதின் சித்திக், பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தான் கென்யாவுக்கு ஷூட்டிங் சென்றிருந்தபோது, அங்கே சூப்பர்ஸ்டார் பேனர் இருந்தது என்றார். மேலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ப்ராம்ட் செய்ய, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்தை பேசினார்.
நடிகர் விஜய்சேதுபதி மேடையேறி பேசும் போது, பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளா வளர முடியும் என வில்லன் ரோல் தேர்ந்தெடுத்ததற்கு அட்டகாசமான விளக்கத்தை அளித்தார்.
இறுதியாக ரஜினி பேசும் போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உதவி மட்டும் போதாது, மக்களும் அவர்களுடன் இணைந்து கரம் கொடுக்க வேண்டும் என தனது பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து 2.0 மாஸ் வெற்றியடைய எந்திரன் எனும் பிள்ளையார் சுழி போட்ட தயாரிப்பாளர் கலாநிதிமாறன் குறித்து பேசினார். பின்னர், விஜய்சேதுபதி போல ஒரு நடிகனை தான் பார்த்ததில்லை என்றும், அவர் ஒரு மகா நடிகன் என்றும், பல நாட்களுக்குப் பின்னர், ஒரு நல்ல நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியை தருவதாக ரஜினி புகழ ஆரம்பிக்க, கீழ் வரிசையில், அமர்ந்திருந்த விஜய் சேதுபதி எழுந்து நின்று தனது நன்றியை சூப்பர்ஸ்டாருக்கு தெரிவித்தார்.
மேலும், படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின், உழைப்பு குறித்தும் ரஜினி பேசினார்.
த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, பீட்டர்ஹெயின், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.