விராட் கோலி மற்றும் ரகானே கேப்டன்சியில் இருக்கும் வித்தியாசம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் விளக்கியுள்ளார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பரத் அருண் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, விராட் கோலி மற்றும் அஜின்கியா ரகானே கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.
அருண் கூறுகையில், ரகானே மிகவும் அமைதியானவர். வெளியில் இருந்து பார்க்கும்போது, அமைதியாக தெரிந்தாலும் ரகானே உள்ளுக்குள் எப்போதும் பதற்றமாக இருப்பார். ஆனால், ரகானே தனது பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.
ஒவ்வொரு வீரரையும் ஊக்கப்படுத்துவார். மிக முக்கியமாக பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால் அவர்கள் வருத்தம் அளவிற்கு நடந்து கொள்ளமாட்டார் என்றார். ரகானே கோபப்படமாட்டார் என்றாலும் அவரின் திட்டத்தை சரியான வழியில் செலுத்த திட்டமிடுவார், அதனை சரியாகவும் செய்வார் என்றும் கூறினார்.
விராட் கோலியை பொருத்த வரை, பந்துவீச்சாளர் 2 தவறான பந்துகளை வீசிவிட்டால் கோலிக்கு கோபம் வந்துவிடும். ஆனால், அது அவருடைய ஆக்ரோஷம். பலர் கோலியின் ஆக்ரோஷத்தை, கோபம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள் என்று அருண் தெரிவித்தார்.