சென்னை டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பவுலர்கள் ஒரு உதிரி ரன் கூட வழங்கவில்லை. இது ஒரு புதிய உலக சாதனையாகும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டோன்ஸ் உள்பட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் 38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இதுவரை 614 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து பவுலர்கள் ஒரு உதிரி ரன் கூட கொடுக்காமல் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். தற்போதைய டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. இதில் இங்கிலாந்து பவுலர்கள் உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதேபோல இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சிறப்பாக பீல்டிங் செய்து ஒரு 'பை' ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. இங்கிலாந்தின் 6 பவுலர்களும் சேர்ந்து மொத்தம் 95.5 ஓவர்கள் வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 60 வருட பாகிஸ்தானின் சாதனையை இங்கிலாந்து பவுலர்கள் முறியடித்துள்ளனர்.
1955ல் லாகூரில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த போட்டியில் பவுலர்கள் உதிரி ரன்களே வழங்காமல் ஒரு சாதனையை படைத்தனர். அன்று இந்தியா 328 ரன்கள் எடுத்தது. அப்போது பாகிஸ்தான் பவுலர்கள் ஒரு உதிரி ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. தற்போது இந்த சாதனையை இங்கிலாந்து பவுலர்கள் முறியடித்துள்ளனர். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் ஒரு அளவே இல்லாமல் ஏராளமான உதிரி ரன்களை விட்டுக் கொடுத்தனர். இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய பவுலர்கள் 45 உதிரி ரன்களையும், 2வது இன்னிங்சில் 7 என மொத்தம் 52 உதிரி ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்த 52 உதிரிகளில் 27 நோ பால்களும், 17 'பை' ரன்களும் அடக்கம்.