திகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த முதலீடு அனுமதி விவகாரத்தில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத் துறையும் அவர்கள் மீது தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி பெஞ்ச், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தார். ஆனால், அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் தற்போது திகார் சிறையிலேயே தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட் நாளை(நவ.26) தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்தித்து பேசினர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சசிதரூர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி ஆகியோர் இன்று(நவ.25), திகார் சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சசிதரூர் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. 98 நாட்கள் சிறையில்... எதற்காக? ரூ.9.96 லட்சம் பணபரிமாற்றத்திற்காக... அதுவும் காசோலையாகத் தான். மதிப்புமிக்க குடிமகன்களை இப்படி நடத்துவது உலகத்திற்கு இந்தியா மீது தவறான சமிக்ஞையை கொடுக்கும் என்றார்.